சபா மாநில முன்னாள் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் பீட்டர் ஆண்டனி, உரிமம் பெற்ற கைதி விடுதலைத் திட்டமான பிபிஎஸ்எல்லின் கீழ் விடுவிக்கப்பட்டது விதிமுறைகளுக்கு உட்பட்டதே என மலேசிய சிறைத் துறை தெரிவித்துள்ளது.
மற்ற கைதிகளைப் போலவே அவரும் தகுதி மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பிபிஎஸ்எல் என்பது நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்வதோ, குறைப்பதோ அல்ல என்றும், மீதமுள்ள தண்டனையை சமூகத்தில் இருந்தபடியே விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புடன் அவர் தொடர்ந்து அனுபவிப்பார் என்றும் சிறைத்துறை விளக்கமளித்துள்ளது.
மேலும், பிபிஎஸ்எல் பரிசீலனைக்கு குறைந்தது தண்டனையின் மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்திருக்க வேண்டும்.
அதன்பின் கைதியின் நன்னடத்தை, மறுவாழ்வு முன்னேற்றம், குடும்ப ஆதரவு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டர் ஆண்டனிக்கு ஆவண மோசடி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2025 -ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சிறைத் தண்டனையைத் தொடங்கிய அவர், 2026 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிபிஎஸ்எல் கீழ் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங், இந்த விடுதலை விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.








