கோலாலம்பூர், டிசம்பர்.10-
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினர், இன்று காலையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர்.
காலை 10.45 மணியளவில் வந்தடைந்த மூன்று இந்திய குடும்பத்தினரிடமும், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர்களின் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
அந்த மூன்று இளைஞர்களும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு கடைசி 13 நிமிடங்களில் என்ன நடந்தது என்பதைத் துல்லியாகத் தனது கைப்பேசியில் பதிவு செய்த சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி, தான் பயன்படுத்திய கைப்பேசியையும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு வந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தினால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது டி. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
அதிகாலை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசாரின் கூற்றுப்படி, இந்த மூவரும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 'கேங் டிதி' (Gang DT) கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், கைது நடவடிக்கையின் போது ஒரு போலீஸ் அதிகாரியை அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். சம்பவத்தின் போது பதிவுச் செய்யப்பட்ட 13 நிமிட ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில், அந்த இளைஞர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்ததாகவும், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு , தங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.








