சிபு, ஆகஸ்ட்.10-
மலேசியாவிலேயே முதன் முறையாக, அடுத்த ஆண்டு முதல் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்க சரவாக் அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. சுமார் 600 மில்லியன் ரிங்கிட் செலவில் வழங்கப்படும் இந்த இலவசக் கல்வி, மாநிலத்திற்குச் சொந்தமான நான்கு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 64 படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என சரவாக் மாநிலத்தின் கல்வி, புத்தாக்கம், மாநில திறன் மேம்பாட்டு துணை அமைச்சர் அனுவார் ராபி தெரிவித்தார்.
தேர்தல்களில் இவ்வாறான வாக்குறுதி கொடுக்காத போதும், சரவாக் மாணவர்களின் நலன் கருதியே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் அவர் குறிப்பிட்டார். இந்த முன்னோடித் திட்டம், சரவாக் மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகப் பல தரப்பிலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சரவாக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், Curtin Malaysia பல்கலைக்கழகம், Sarawak Swinburne பல்கலைக்கழகம், i-CATS பல்கலைக்கழகம் ஆகிய உயர்க்கல்வி நிலையங்கள் இத்திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன.








