தமது சொந்த பயன்பாட்டிற்காக ஆடம்பர பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று பேசும் அன்வார், புதிதாக ஆடம்பர பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் என சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறியுள்ள அன்வார், அந்த கார் தனக்குச் சொந்தமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்கு எதிராக பரபரப்படும் உண்மைக்குப் புறம்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், "அது ஒரு பழைய வாகனம். ஏன் இப்படி பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள்?" என நேற்று செங்காராங்கில் நடைபெற்ற 'யோக்! மெரியாக்கான் ஜொகூர்! உந்தி ஹராப்பான்' நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்வார் மக்கள் முன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தற்போது தாம் பயன்படுத்தி வரும் மெர்சிடிஸ்-பென்ஸ் காரானது, மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய பரிசு என்றும், அந்த வாகனம் தனது தனிப்பட்ட பெயரில் அல்லாமல் பிரதமர் துறையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் துறையும், சடங்குகள் ஏற்பாடு மற்றும் அனைத்துலக மாநாட்டு செயலகப் பிரிவான பியூபாவும், கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அண்மையில் பிரதமர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ வாகனம் அரசாங்கத்தால் புதிதாக வாங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனம் அல்ல என்றும், ஏற்கனவே அரசாங்க சொத்தாக இருந்த வாகனமே என்றும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








