விவாகரத்துக்குப் பிறகு குழந்தையின் பராமரிப்பு உரிமை ஒரு பெற்றோருக்கு வழங்கப்பட்டால், அவருக்கு தனி பாதுகாப்பு உரிமை தானாக கிடைக்காது என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மற்றொரு பெற்றோரின் பாதுகாப்பு உரிமையை நீக்குவதற்கு தனியான சட்டப்பூர்வ காரணம் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தம்பதியர் ஒருவரின் விவாகரத்தின் போது தாய்க்கு குழந்தையின் பராமரிப்பு உரிமையும், இருவருக்கும் கூட்டு பாதுகாப்பு உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.
பின்னர், சூழல் மாற்றத்தின் காரணமாக, புத்ராஜெயா உயர்நீதிமன்றம் பராமரிப்பு மற்றும் தனி பாதுகாப்பு உரிமையை தந்தைக்கு வழங்கியிருந்தது.
இந்த உத்தரவை தற்போது பகுதியளவில் மாற்றியுள்ள அப்பீல் நீதிமன்றம், 13 வயது சிறுவனின் விருப்பத்தின் அடிப்படையில் பராமரிப்பு உரிமை தந்தையிடமே தொடரலாம் என்றும், ஆனால் தாயின் பாதுகாப்பு உரிமையை நீக்க போதுமான ஆதாரம் இல்லாததால், கூட்டு பாதுகாப்பு உரிமை தொடரும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குழந்தையின் அன்றாட முடிவுகளை தந்தை எடுக்கலாம்.
ஆனால் கல்வி, சமயம், மருத்துவ சிகிச்சை, கடப்பிதழ், வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து இரு பெற்றோரும் இணைந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








