ஜோகூர் பாரு, டிசம்பர்.02-
தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்றுவதற்கு தாங்கள் உத்தரவிட்டதாகக் கூறப்படுவதை ஜோகூர் மாநில கல்வி இலாகா இன்று மறுத்துள்ளது.
அப்படி எந்தவோர் உத்தரவையும் தாங்கள் பிறப்பிக்கவில்லை என்று ஜோகூர் மாநில கல்வி இயக்குநர் முகமட் ஹனாஃபி சமாட் தெரிவித்தார். எந்தவொரு தருணத்திலும் ஜோகூர் கல்வி இலாகா இது போன்ற உத்தரவைப் பிறப்பித்ததில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
ஜோகூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் முன் வளாகத்தில் வீற்றிருக்கும் திருவள்ளுவர் சிலையை அகற்றுவதற்கு மாநில கல்வி இலாகா உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி தொடர்பில் முகமட் ஹனாஃபி இவ்விளக்கத்தைத் தந்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகு விரைவில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி விளக்கம் அளிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கல்வி அதிகாரிகள் சமயம் மற்றும் இனம் சார்ந்த உணர்ச்சிகரமான விவகாரங்களில் மிகுந்த கவனமாக இருக்கும்படி முகமட் ஹனாஃபி கேட்டுக் கொண்டார்.
ஜோகூர் மாநிலத்தில் உள்ள கல்வி வளாகங்களில் பணியாற்றுகின்றவர்கள், பல்லின மக்களின் நல்லிணக்கத்தையும், நல்வாழ்வையும் உறுதிச் செய்வதற்கு இனம் மற்றும் சமயம் சார்ந்த விவகாரங்களைத் தொட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜோகூர், சிகமாட் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலை இருக்கக்கூடாது என்று மாவட்ட கல்வி அதிகாரி அப்துல் ரஹ்மான் கெசிக் இப்படியோர் உத்தரவை கடிதம் வாயிலாகப் பிறப்பித்துள்ளதாக அறியப்படுகிறது.








