Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம், இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம், இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலாம், டிச.2-


2024 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில அரசு பள்ளிகளுக்கு வழங்கும் உதவித் திட்டத்தில், தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம், இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் மானியத்தில் 30 விழுக்காட்டுத் தொகை STEM மற்றும் TVET தொடர்பான கல்வித் திட்டங்களுக்கும், எஞ்சிய 70 விழுக்காட்டுத்தொகை பள்ளிக் கட்டிடங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாப்பாராயுடு விளக்கினார்.

சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் இந்த நிதி, பள்ளி நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும், குழப்பங்களையும் தவிர்க்கும் என்பதுடன் நிதி நிர்வகிப்பை எளிமைப்படுத்தும் என்று பாப்பாராய்டு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எந்தெந்தப் பள்ளிகளில் LPS எனப்படும் பள்ளி மேலாளர் வாரியம் உள்ளதோ, அப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம், தாங்கள் பெற்ற நிதியில் 70 விழுக்காட்டுத்தொகையை LPS வங்கி கணக்கில் சேர்த்து விட வேண்டும். அப்பணத்தைக்கொண்டு பள்ளி கட்டிடங்களை சீரமைக்கும் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பை LPS ஏற்கும்.

எஞ்சிய 30 விழுக்காட்டுத் தொகையை பெற்றோர் ஆசிரியர் சங்கம் கையாளும். குறிப்பாக STEM மற்றும் TVET தொடர்பான கல்வித் திட்டட்ங்களை மேம்படுத்தும் பணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் அந்த 30 விழுக்காட்டுத் தொகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாப்பாராய்டு விளக்கினார்.

LPS இல்லாத பள்ளிகளுக்கு, மாநில அரசு வழங்கும் முழு தொகையையும் பெற்றோர் ஆசிரியர் சங்கமே நிர்வகிக்க வேண்டும். பள்ளி நிகழ்ச்சிகள் உட்பட கட்டட மேம்பாடுகள் இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பைப் பெற்றோர் ஆசிரியர் சங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாப்பாராய்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு முதல் 30 விழுக்காட்டுத் தொகை பெற்றோர் ஆசிரியர் சங்க வங்கிக்கணக்கிலும், 70 விழுக்காட்டுத் தொகை LPS வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று பாப்பாராய்டு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →