Oct 2, 2026
Thisaigal NewsYouTube

வேலை வாய்ப்புக் காப்புறுதி முறை: 2025 ஆம் ஆண்டு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேலை வாய்ப்புக் காப்புறுதி முறை: 2025 ஆம் ஆண்டு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

கோலாலம்பூர், டிசம்பர்.08-

சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் வாயிலாக வேலை வாய்ப்புக் காப்புறுதி முறை சலுகைகளை மேம்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மறுவேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் செயல்திறனை அதிகரிக்கவும் வகை செய்யும் வேலை வாய்ப்புக் காப்புறுதி சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டத் திருத்த மசோதாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புக்காக மக்களவையில் தாக்கல் செய்த மனித வள துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான், சட்டம் 800 ஆவது பிரிவில் சீர்திருத்தங்கள் செய்வது மூலம் வேலை இழந்த சொக்சோ சந்தாதாரர்களுக்கு மிகவும் நிலையான வருமான ஆதரவு, சிறந்த பயிற்சி வாய்ப்புகள் மற்றும் மிகவும் பயனுள்ள மறுவேலை வாய்ப்புத் திட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன என்று விளக்கினார்.

இந்த நடவடிக்கையானது, தற்போதைய வேளையில் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப சீரான பணியாளர் இயக்கத்தையும் ஆதரிப்பதாக உள்ளது என்று துணை அமைச்சர் விளக்கினார்.

SIP என்று சுருங்க அழைக்கப்படும் வேலைக் காப்புறுதி முறையின் அனுகூலமானது, வேலை இழந்த தனிநபர்களுக்கு நிதி உதவி மற்றும் மறு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திட்டமாகும் என்பதை துணை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

அவற்றின் முக்கிய அம்சங்களில் ஒன்று தகுதியான விண்ணப்பதாரர்கள், வேலையை இழந்த பிறகு புதிய வேலையைத் தேடும் காலக் கட்டத்தில், குறிப்பிட்ட காலத்திற்கு மாதாந்திர நிதி உதவியைப் பெற வகை செய்கிறது.

அவர்களின் முந்தைய சம்பளத்தில் வழங்கப்படும் 25 விழுக்காட்டுத் தொகை 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புத் திறன் பயிற்சித் திட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 30 ரிங்கிட் வழங்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணம் 7 ஆயிரம் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தவிர போக்குவரத்து அலவன்ஸ் தொகை, வசிப்பிடத்திலிருந்து 100 கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்தில் புதிய வேலை வாய்ப்பை ஏற்றுக் கொள்ளும் சந்தாதாரர்களுக்கு ஒரு முறை ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்.

புதிய சட்டத் திருத்தத்தின் வழி எஸ்.ஐ.பி. (SIP) சந்தாதாரர்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவுத் தொகை தற்போது 25 ஆயிரம் ரிங்கிட் வரை எட்டலாம்.

தவிர வேலை பொருத்தம், தொழில் ஆலோசனை, மறுபயிற்சி மற்றும் தொழிலாளர் சந்தை தரவுகளின் விரிவான பயன்பாடு உள்ளிட்ட சொக்சோவின் செயல்பாடு வலுப்படுத்தப்பட்டு இருப்பதை இந்தச் சட்டத் திருத்தம் உறுதிச் செய்கிறது என்று டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →