கோலாலம்பூர், டிசம்பர்.17-
மலேசியாவின் அதிகாரப்பூர்வ குடிநுழைவு வாயில்களைப் பாதுகாப்பாக நிர்வகிக்க, போலீசின் முழுமையான பங்கேற்பும், நிபுணத்துவமும் அவசியம் என மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான எம்சிபிஏ தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் அமலாக்க நடவடிக்கைகள் என்பது அதிகளவில் செயல்பாட்டு அபாயங்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸையின், போலீசாரின் புலனாய்வுத் திறன்களும், விசாரணை நிபுணத்துவமும் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டின் கீழ், போலீஸ் இலாகாவானது, முக்கிய அங்கமாக இல்லை என்பதால், எல்லைக் கட்டுப்பாட்டில் போலீசாரின் பங்களிப்பு குறைவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றி வந்த முகமட் ஷுஹைலி, அங்கு போலீஸ் படை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார்.
இதற்கு முன்பு பினாங்கு மாநிலம் மற்றும் கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவராக பொறுப்பேற்று, பரந்த அனுபவத்தைக் கொண்டவரான முகமட் ஷுஹைலி, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் புக்கிட் அமான் போலீஸ் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் சிஐடி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.
இரண்டரை ஆண்டு கால சேவைக்குப் பின்னர் இவ்வாண்டு, ஜூலை 1-ஆம் தேதி முதல், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சியின் தலைமை இயக்குநராக உச்சப்பதவிக்கு அமர்த்தப்பட்டார்.








