கிள்ளான், ஜூலை.22-
கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் ஆபத்து அவசர சிவப்பு மண்டலப் பகுதி வார்டில் மின்சார இணைப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து, அம்மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இன்று மாலை 5.13 மணிக்கு இச்சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு வந்தவுடன் அண்டாலாஸ் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும் தீயணைப்புப் படையினர் வருவதற்குள் மருத்துவமனைக் குழுவினர் வெற்றிகரமாக அந்த தீயைக் கட்டுப்படுத்தினர்.
இதனால், அப்பகுதியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இதில் யாரும் காயமடையவில்லை என்று அவர் விளக்கினார்.








