புத்ராஜெயா, ஆகஸ்ட்.14-
கிள்ளானில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் விஷயத்தை உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ஐந்தாம் படிவ மாணவி ஜி. ஷர்வினா மரணம் தொடர்பில் மேல் நடவடிக்கை இல்லை என்று கூறி, விசாரணை அறிக்கை மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை போலீசார் இன்று மறுத்துள்ளனர்.
கடந்த மே 27 ஆம் தேதி கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் இறந்த அந்த மாணவியின் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கையைத் தாங்கள் மூடவும் இல்லை, மறுபடியும் திறக்கவும் இல்லை. மாறாக, இது தொடர்பாக புகார் கிடைத்தப் பின்னர் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த விசாரணை இன்னமும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஆய்வுக்கூட அறிக்கைக்காகப் போலீசார் காத்திருப்பதாக ஏசிபி விஜயராவ் விளக்கம் அளித்தார்.
அந்த மாணவியின் மரணம் தொடர்பில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட இதுவரை 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.மேலும் சில நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் மேல் நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏசிபி விஜயராவ் கூறினார்.
மாணவி ஜி. ஷர்வினா மரணத்தில் பள்ளியின் அலட்சியப் போக்கு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் லஞ்சம் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த மாணவியின் பெற்றோர், இன்று புத்ராஜெயாவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் புகார் செய்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் ஏசிபி விஜயராவ் மேற்கண்டவாறு கூறினார்.








