ஜார்ஜ்டவுன், ஜனவரி.22-
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வரும் ஜனவரி 31-ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் மலேசியர்களுக்கு இலவச படகு சேவைகளை வழங்குவதாக பினாங்கு துறைமுக ஆணையமும், Penang Port Sdn Bhd-ம் அறிவித்துள்ளது.
இந்த இலவசப் பயணச் சலுகையானது, பட்டர்வொர்த்தில் உள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் முனையத்திற்கும், தீவில் உள்ள ராஜா துன் ஊடா முனையத்திற்கும் இடையேயான இருவழிப் பயணத்திற்குப் பொருந்தும்.
வரும் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை சேவைகள் இயக்கப்படும் நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை அவை நீட்டிக்கப்படவுள்ளது.
இதன் அடிப்படையில், பொதுமக்கள் தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் டத்தோ யியோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் மலேசியர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கான தங்களின் உறுதிப்பாட்டையே இந்த முயற்சி பிரதிபலிப்பதாக யியோ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இலவச சேவையானது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், நிலையான பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.








