உலு சிலாங்கூர், ஆகஸ்ட்.01-
உலு சிலாங்கூர், கலும்பாங், கம்போங் சுங்கை செரியானில் ரயில் இருப்புப் பாதையின் அருகில் கை, கால்கள் கட்டப்பட்டு, துணியில் மூட்டையாகச் சுற்றப்பட்டு இருந்த ஆடவரின் அழுகிய சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், அந்த ஆடவரின் கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டு மரணம் விளைவிக்கப்பட்டுள்ளது என்று சவப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை காலை 11 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்கப்பட்ட அந்த ஆடவரின் சடலம் மீது சுங்கை பூலோ மருத்துவமனை நடத்திய சவப் பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.
சங்கிலிப் போன்ற கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டுள்ளது என்பதற்கான தடயமும் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கை, கால்கள் கட்டப்பட்டப் பின்னரே அந்த நபரின் கழுத்து இறுக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.








