கோல கங்சார், அக்டோபர்.15-
கண்டெய்னர் லோரி ஒன்று, வேகக் கட்டுப்பாடை இழந்து, சாலையில் தடம் புரண்டதில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கோல கங்சார் மெனோரா சுரங்கப்பாதை அருகில் இன்று புதன்கிழமை 8 கிலோமீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து காலை 8.15 மணியளவில் நிகழ்ந்தது. சமநிலையை இழந்த அந்த கண்டெய்னர் லோரி, சாலையின் குறுக்கே குடை சாய்ந்ததால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து நிலைக்குத்தியதாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹேய்ஷாம் ஹாருன் தெரிவித்தார்.
அந்த கண்டெய்னர் லோரி, டயர்களை ஏற்றிக் கொண்டு வடக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் சொற்ப காயங்களுக்கு ஆளான உள்ளூரைச் சேர்ந்த லோரி ஓட்டுநர், ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








