கோலாலம்பூர், ஜனவரி.11-
மலேசியாவில் இணைய வர்த்தக மோசடிகள் முன்பு இருந்ததை போல் இல்லாத வகையில் பூதாகரமாக வெடித்துள்ளன. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் இ-காமர்ஸ் குற்றங்கள் 82 விழுக்காடு அதிகரித்து, பொதுமக்கள் சுமார் 129 மில்லியன் ரிங்கிட்டை இழந்து தவிக்கின்றனர். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் தகவலின்படி, 2024-ல் 7ஆயிரத்து 662 ஆக இருந்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கை, 2025-ல் மின்னல் வேகத்தில் 13 ஆயிரத்து 979 ஆக உயர்ந்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது.
விலை உயர்ந்த பொருட்களைக் நம்பமுடியாத மலிவு விலையில் தருவதாக ஆசை காட்டி, போலியான பொருட்களை அனுப்புவது அல்லது பணத்தைப் பெற்றுக் கொண்டு மாயமாவது என மோசடி கும்பல்கள் நூதன வலை விரிப்பதாகக் காவற்படையினர் எச்சரிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய தனிநபர் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறும், அவசரப்படுத்தும் விற்பனையாளர்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் உழைப்பின் ஊதியம் திருடப்படாமல் இருக்க, எந்தவொரு இணையப் பணப் பரிவர்த்தனைக்கும் முன்னதாக 'Semak Mule' தளத்தில் சரிபார்ப்பதே புத்திசாலித்தனம் என காவற்படை அறிவுறுத்தியுள்ளது.








