கோலாலம்பூர், நவம்பர்.25-
நாட்டில் உள்ள அகதிகள், முறையாகப் பதிவு செய்யப்படுவதை உறுதிச் செய்வதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அரசாங்கம், அகதிகள் பதிவு ஆவண முறையைச் செயல்படுத்தவிருப்பதாக உள்துறை துணை அமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
தற்போது, நாட்டில் உள்ள அகதிகள் பதிவு ஆவண முறையை ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதரகம் நிர்வகித்து வருகிறது. அந்த முறை மாற்றப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் தரவு ஒழுங்கின்மையைச் சீர்செய்யும் முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று ஷாம்சுல் அனுவார் குறிப்பிட்டார்.
நாட்டில் அகதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வெளிநாட்டினர் ஒவ்வொருவரின் பயோமெட்ரிக்ஸும் சேகரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
இதற்காக அகதிகளாக உறுதிச் செய்யப்பட்டு, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு அகதிகளுக்கான அடையாள ஆவணம் வழங்கப்படும் என்று இன்று மக்களவையில் செபுத்தோ எம்.பி. திரேசா கொக் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ஷாம்சுல் அனுவார் இதனைத் தெரிவித்தார்.








