ஜெலெபு, ஆகஸ்ட்.30-
ஜோகூர், சிகாமட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் மிதமான நில நடுக்கத்தினால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடையாமல் அமைதி காக்க வேண்டும் என்று துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சிகாமட் மக்கள் பதற்றமோ, பீதியோ கொள்ளாமல் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு துணைப்பிரதமர் வலியுறுத்தினார். சிகாமட்டில் இன்று காலை நிகழ்ந்த மிதமான நில நடுக்கத்துடன் கடந்த 6 நாட்களில் ஐந்து முறை அப்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்க அதிர்வால் அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.
எனினும் நடப்பு நிலவரத்தை அரசாங்கத்தின் அனைத்து ஏஜென்சிகளும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூட நில அதிர்வு குறித்து தாம் அறிக்கை சமர்ப்பித்து, அது குறித்து விளக்கம் அளித்தாக ஸாஹிட் தெரிவித்தார்.
மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா மற்றும் புவி, கனிம வள இலாகாக்கள் சமப்பித்துள்ள அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவருமான ஸாஹிட் குறிப்பிட்டார்.








