வளர்ப்பு குரங்கு ஒன்றை விழுங்கியப் பின்னர் நகர முடியாமல் கிடந்த ராட்ஷச மலைப்பாம்பு ஒன்றை பொது தற்காப்புப்படையினர் பிடித்தனர். கெடா, பாலிங், பூலாய், கம்போங் செரா உலு என்ற இடத்தில் நேற்று காலையில் அந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.
அந்த கிராமத்தை சேர்ந்த குடியானவர் ஒருவர், வீட்டின் பின்புறம் தாம் வளர்க்கும் குரங்கு ஒன்றுக்கு உணவு கொடுக்க சென்ற போது அவ்விடத்தில் ராட்ஷச மலைப்பாம்பு ஒன்று தாம் வளர்த்த குரங்கை விழுங்கிக் கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
பின்னர் அது குறித்து அவர் பொது தற்காப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் என்று பாலிங் மாவட்ட ஏ.பி.எம் அதிகாரி முகமது அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
7 மீட்டர் நீளமுள்ள 80 கிலோ எடை கொண்ட அந்த மலைப்பாம்பு பின்னர் லாவகமாக பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








