கோலாலம்பூர், ஜனவரி.21-
சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடித் திட்டம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஐஜேஎம் கார்ப் பெர்ஹாட் நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்திய எஸ்பிஆர்எம் அதிகாரிகள், சுமார் 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
கட்டுமானம், சொத்து மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை சார்ந்த ஒரு பெருநிறுவனத்துடன் தொடர்புடைய குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட நான்கு இடங்களில் இந்த சோதனைகளானது நடத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், இரண்டு ஐஜேஎம் நிர்வாகிகள் உட்பட 9 பேர், நேற்று எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐஜேஎம் நிறுவனம் சம்பந்தப்பட்ட, கார்ப்பரேட் நிர்வாகம், கொள்முதல் செயல்முறைகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு சொத்துக்களின் உரிமையை உள்ளடக்கிய பிரச்னை தொடர்பாக எஸ்பிஆர்எம் ஒரு கூட்டு நிறுவனத்தை விசாரித்து வருகின்றது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, பிரிவு 16 மற்றும் பணமோசடித் தடுப்பு, பயங்கரவாத நிதித் தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம் 2001, பிரிவு 4(1) ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருவதாக எஸ்பிஆர்எம் தலைவர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பில், பங்கு விலையில் தில்லுமுல்லு நடந்ததற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








