முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் ஆசாம் பாக்கியை, அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுவதை வர்த்தகர் ஆல்பர்ட் தே மறுத்துள்ளார்.
தாம் வெளியிட்ட கருத்துகள், உண்மையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை அல்லது பொது நலன் சார்ந்த விவகாரம் குறித்த நியாயமான கருத்துகள் என ஆல்பர்ட் தே தெரிவித்துள்ளார்.
ஆசாம் பாக்கி தொடர்ந்த அவதூறு வழக்கில், கடந்த மாதம் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் ஆல்பர்ட் தே தமது தற்காப்பு வாதத்தைத் தாக்கல் செய்தார்.
தம்மைப் பற்றிய கருத்துகள் மூலம், ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைகளை கையாண்டதாகவும், சபாவில் ஊழல் விவகாரங்களில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகவும், அரசியல்வாதிகளைப் பாதுகாக்க அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் ஆல்பர்ட் தே குற்றஞ்சாட்டியதாக ஆசாம் பாக்கி கூறியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தமது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் ஆசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.








