கோலாலம்பூர், ஜனவரி.06-
இவ்வாண்டு இறுதியில், தகவல் அறியும் உரிமை சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்துள்ளதற்கு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.
மடானி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையானது நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தகவல்களை, பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளும் பெறுவதற்கான வாய்ப்பை இந்த மசோதா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறியும் உரிமை சட்டமானது, பெறுவதற்கு கடினமாக இருந்த தகவல்களை, பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் கோருவதற்கான இடத்தை உருவாக்குகிறது என்று புவிசார் அரசியல் நிபுணரும், பேராசிரியருமான டாக்டர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, இனி உணர்வுப்பூர்வமானதாகவோ அல்லது ரகசியமானதாகவோ கருதப்படும் தகவல்களைப் பொதுமக்கள் பெற இச்சட்டமானது வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், அரசாங்கம் சில தகவல்களை மறைப்பதாக பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் எண்ணத்தை இந்த நடவடிக்கையானது மாற்றும் என்றும் அஸ்மி சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கிடையில், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறை இயக்குநர், இணைப் பேராசிரியர் டாக்டர் அஸ்லான் அலியும் தகவல் உரிமைச் சட்டத்தை வரவேற்றுள்ளார்.
முந்தைய அரசாங்கமானது இம்முயற்சியில் தோல்வியடைந்ததைச் சுட்டிக் காட்டியுள்ள மஸ்லான், அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில், உயர்மட்ட அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.








