லாபுவான், ஜூலை.24-
தனது மனைவிக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை குத்தகைகளை வழங்கி வந்ததாகக் கூறப்படும் தலைமை மருத்துவ உதவி அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
தனது மனைவியின் நிறுவனத்திற்குக் குத்தகைகளை வழங்கியது மூலம் சம்பந்தப்பட்ட தலைமை மருத்துவ உதவி அதிகாரி, தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
50 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி நேற்று லாபுவானில் உள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை இன்று தொடங்கி நான்கு நாட்கள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.








