ஷா ஆலாம், ஜனவரி.10-
சிலாங்கூர் மாநிலத்தின் கோலாலங்காட் மற்றும் புக்கிட் தஹார் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பன்றிப் பண்ணைகளை அமைப்பதற்கான மாநில அரசின் திட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடிம் இட்ரிஸ் ஷா தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
கோலாலங்காட் மாவட்டத்தின் தஞ்சோங் சிப்பாட் (Tanjong Sepat) பகுதியில் பன்றிப் பண்ணை செயல்பாடுகளைத் தொடர அனுமதி அளித்து, பின்னர் 2030-இல் அவற்றை புக்கிட் தஹாரில் உள்ள 202 ஹெக்டர் நிலப் பரப்பளவிலான இடத்திற்கு மாற்றும் சிலாங்கூர் மாநில அரசின் முடிவை சுல்தான் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இந்தப் பண்ணைகளால் ஏற்படும் கடுமையான துர்நாற்றம், ஆற்று நீர் மாசுபாடு மற்றும் ஈக்களின் தொல்லை ஆகியவற்றால் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். கோலாலங்காட்டில் உள்ள சுல்தானின் அதிகாரப்பூர்வ இல்லமான 'இஸ்தானா பந்தாய் பஹாகியா' (Istana Pantai Bahagia) கூட இந்தத் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையாக மலாய் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இத்தகைய பெரிய அளவிலான ஏற்றுமதி சார்ந்த பண்ணைகளை அமைப்பது சமூக நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல என்றும், இது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.








