பகாங்,பெலங்கை சட்டமன்ற இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 10 மணியுடன் முடிவடைந்த வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் தேர்தல் அதிகாரி இதனை அறிவித்தார்.பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த ஓர் சுயேட்சை வேட்பாளர் என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பாரிசான் நேஷனல் சார்பில் பெந்தோங் அம்னோ தொகுதியின் செயற்குழு உறுப்பினர் அமிசார் அபு அடாம், பெர்க்காத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சியைச் சேர்ந்த காசிம் சமாட் மற்றும் ஓர் சுயேட்சை வேட்பாளராக ஹஸ்லிஹெல்மி டி.எம் ஷுஹசில் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுத்தாக்கல் ஃபெல்டா கெமசுல், டேவான் ஒராங் ராமாய் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. பெலங்கை சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சுங்கை பூலோ, எல்மினாவில் இலகு ரக விமான விபத்தில் அம்னோவை சேர்ந்த பெலங்கை சட்டமன்ற உறுப்பினர் ஜோஹரி ஹருன் மரணமுற்றதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.








