அலோர் ஸ்டார், ஜனவரி.07-
கெடா மாநில அரசாங்கம், பினாங்கு மீதான தனது உரிமைக் கோரிக்கை தொடர்பாக இந்த 2026-ஆம் ஆண்டு முடிவதற்குள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கையைத் தொடங்கும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமது சனுசி முகமது நோர் இன்று அறிவித்துள்ளார்.
பினாங்கு தீவு மற்றும் செபராங் பிறை ஆகியவை வரலாற்று ரீதியாக கெடா சுல்தானுக்குச் சொந்தமானவை என்றும், அவை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டவை என்றும் மந்திரி பெசார் சனூசி கூறுகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தேவையான சட்டக் கோணங்களைக் கெடாவின் சட்டக் குழு ஆராய்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்காக நியமிக்கப்பட்ட வரலாற்று மற்றும் சட்ட நிபுணர்கள் குழு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து தனது இறுதி அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது என்பதையும் சனூசி சுட்டிக் காட்டினார்.
பினாங்கு தீவுக்கான வருடாந்திர குத்தகைத் தொகையை தற்போதைய 10 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும். சுங்கை மூடா (Sungai Muda) ஆற்றிலிருந்து பினாங்கு எடுக்கும் நீருக்காக ஆண்டுக்கு 50 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் முதலிய கோரிக்கைகளை கெடா முன்வைத்துள்ளது.
எனினும் இதற்கு பதில் அளித்துள்ள பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ், "நீதிமன்றத்தில் சந்திப்போம்" எனச் சவால் விடுத்துள்ளார். 1957-ஆம் ஆண்டு கூட்டரசு அரசியலமைப்பின்படி பினாங்கு ஒரு இறையாண்மைக் கொண்ட மாநிலம் என்றும், 200 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரங்களை மீண்டும் கிளறுவது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








