காஜாங், பிப்ரவரி.10-
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாலான் செராஸ், உலு லங்காட்டில் முதியவர் ஒருவரைக் காயப்படுத்தியதோடு, அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட 52 வயது வியாபாரிக்கு, காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட சைஃபுல் அட்லி யுசோஃப் என்ற அந்த வியாபாரி, அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாஜிஸ்திரேட் ஃபாதின் டயானா ஜாலில் உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மாலை 4.05 மணியளவில் 70 வயது Liew Khoon Foo என்பவரின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் கைகளாலும் கால்களாலும் தாக்கிக் காயப்படுத்தியதாக அந்த வியாபாரி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த அன்று மாலை 3.45 மணியளவில் பாதிக்கப்பட்டவர் ஓட்டி வந்த புரோட்டான் வீரா காரும், சைஃபுல் அட்லி ஓட்டி வந்த Toyota Vellfire காரும் விபத்துக்குள்ளானதே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாகும்.
பயத்தினால் பாதிக்கப்பட்ட முதியவர், வாகனத்தை நிறுத்தாமல் Taman Suntex நோக்கிச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்த சைஃபுல் அட்லி, போக்குவரத்து சமிக்ஞை விளக்கு அருகே முதியவரின் வாகனத்தை மறித்து, காரை உதைத்ததுடன் அந்த முதியவரையும் கடுமையாகக் தாக்கியுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








