கோலாலம்பூர், டிசம்பர்.21-
கம்போங் சுங்கை பாரு மறுசீரமைப்புத் திட்டத்தில் வீடுகளை இழந்த மக்கள், வாக்குறுதி அளித்தபடி மீண்டும் தங்கள் இடத்திற்கே குடியேற ஏதுவாக, இரண்டு குடியிருப்புப் பிளாக்குகளை முன்னுரிமை அடிப்படையில் கட்டி முடிக்க வேண்டும் என தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஜோஹாரி அப்துல் கானி சாடியுள்ளார். "4 ஆண்டுகளில் வீடு கிடைக்கும் என்று நம்பி வெளியேறிய மக்கள் 8 ஆண்டுகளாகியும் இன்னும் வீடின்றி தவிக்கிறார்கள்" என்று குறிப்பிட்ட அவர், பழைய நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்கிய புதிய நிறுவனம் இதில் அலட்சியம் காட்டக்கூடாது என எச்சரித்துள்ளார்.
ஒப்பந்தம் செய்த ஒரு நிறுவனம் தனது பங்குகளை மற்றொரு நிறுவனத்திற்கு விற்றதால் ஏற்பட்ட குளறுபடிகளைச் சுட்டிக் காட்டிய அவர், இஃது ஏழை மக்கள் வாழும் குடிசைப் பகுதி அல்ல, இது அவர்களின் உரிமை என்று ஆவேசமாகப் பேசினார். கடந்த நவம்பர் 30-ஆம் தேதி முறைப்படி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், நில உரிமையாளர்களின் நலனே முதல் முன்னுரிமை என்றும் அவர் கோலாலம்பூர் டத்தோ பண்டாரிடம் வலியுறுத்தியுள்ளார்.








