கோலாலம்பூர், மே.27-
நேற்று ஈரான் அதிபர் Masoud Pezeshkian-னுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சரியான சந்தர்ப்பம் அமையும் போது, தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலின் போது, ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த மேலும் ஒரு மலேசியக் கப்பலை விடுவிக்க உதவிய ஈரானுக்கு அன்வார் நன்றி தெரிவித்தார்.
அதே வேளையில், ஈரான், விரைவில் அமைதி நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட டிரோன் தாக்குதல்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை மலேசியா தொடர்ந்து கண்டிப்பதாகவும், ஈரான் அதிபரிடம், அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மலேசியாவின் அமைதி மற்றும் மனிதாபிமான நிலைப்பாட்டிற்கு ஈரான் அதிபர் பாராட்டு தெரிவித்ததுடன், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தெஹ்ரானுக்கு வருமாறு அன்வாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், “சரியான சந்தர்ப்பம் அமையும் போது, நிச்சயமாக ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.








