கோலாலம்பூர், செப்டம்பர்.03-
மலேசியாவில் சட்டப்பூர்வமாக வியாபாரம் செய்வதற்கு உள்ளூர்வாசிகளைத் திருமணம் செய்து கொள்ளும் தந்திரத்தை அந்நிய நாட்டவர் கையாண்டு வருவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்சைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுஸியா சாலே இன்று நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்தார்.
1956 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டப் பிரிவு 197 ஆவது விதியின் கீழ் மலேசியப் பிரஜைகள் அல்லது அவர்களைத் திருமணம் செய்திருக்கும் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைக் கொண்டவர்கள், தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து தங்கள் வர்த்தகத்தைப் பதிவு செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று துணை அமைச்சர் விளக்கினார்.
ஆனால், இந்தச் சலுகையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்நிய நாட்டவர்கள், தங்களின் வியாபாரத்தை மலேசியாவில் தொடங்கவும், விஸ்தரிக்கவும் மிகத் தந்திரமாக உள்ளூர் துணையை மணந்து கொண்டு, தங்கள் வர்த்தகத்தை மிகச் சாமார்த்தியமாகப் பதிவு செய்து கொள்கின்றனர் என்று டாக்டர் ஃபுஸியா சாலே விளக்கினார்.
இத்தகைய அந்நிய நாட்டவர்களின் வருகையும், சட்டப்பூர்வமாக வியாபாரத்தைப் பதிவு செய்து கொள்ளுவதற்கும் உள்ளூர்வாசிகளை மணந்து கொள்ளும் தந்திரத்தை ஓர் அச்சுறுத்தலாகக் கருத வேண்டும். அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று தமது அமைச்சின் 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான தீர்மானம் வழிமொழிவில் துணை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.








