பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.24-
திருமண வைபவங்கள், கலாச்சார நிகழ்வுகள், நிதி திரட்டும் விருந்துபசரிப்பு போன்ற நிகழ்வுகளில் மதுபான விருந்து உபசரிப்புக்கு சீனப்பள்ளிகளின் மண்டபங்களுக்கு அமைச்சரவை விலக்களிப்பு வழங்கியுள்ளதாக சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லி கூறுகிறது.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள நடப்பு விதிமுறைகள் நிலை நிறுத்தப்படும். புதிய தடைகள் எதுவும் விதிக்கப்படாது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியின் உள்ளடக்கத்தன்மையை ஜசெக பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் உறுதிப்படுத்தியுள்ளார்.
பள்ளி நேரத்திற்கு அப்பாற்பட்டு, பள்ளி வளாகங்களில் நடைபெறக்கூடிய எந்தவொரு நிகழ்விலும் மதுபானம் உபசரிப்பு இருக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்து இருந்தார்.
எனினும் இந்த விவகாரம், இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் சூடான விவாதமாக மாறியது. அரசாங்கத்தின் இந்த உத்தேசப் பரிந்துரைக்கு அந்தோணி லோக், ங்கா கோர் மிங், சாங் லீ காங் மற்றும் தியோங் கிங் சிங் போன்ற சீன அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.








