வெளிநாடுகளில் மனித கடத்தல் கும்பலிடம் சிக்கி அவதியுற்று வரும் மலேசியர்களை மீட்பதற்கு அரசாங்கம் முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதி கூறியுள்ளார்.
அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்ற நோக்கில் அரசு தந்திர உறவு மூலம் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கம் முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனித கடத்தல் கும்பலின் பேச்சை நம்பி வெளிநாடுகளுக்கு சென்று அந்த கும்பலிடம் சிக்கி பரிதவிக்கும் மலேசியர்களை மீட்பதற்கு பலதரப்பட்ட அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அரசாங்கம் கொள்கையாக கொண்டுள்ளதாக சைபுடின் விளக்கினார்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களை அடையாளம் காணுவது, அரசு தந்திர உறவின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்துவது, அவர்களை பாதுகாப்பாக தாயாகம் கொண்டு வருவது ஆகியவை அந்த அணுகுமுறைகளில் அடங்கும் என்று சைபுடின் விளக்கினார்.








