சபாவில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளை காலி செய்வதற்கு அனுமதி மறுத்து விட்ட மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் முடிவை எதிர்த்து, டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி செய்து கொண்ட வழக்கு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலில் சபாவில் ஜி.ஆர்.எஸ் எனப்படும் Gabungan Rakyat Sabah கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்களின் பெர்சத்து கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியை விட்டு விலகிவிட்டதால், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 49 A பிரிவின் கீழ் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதி இழந்து விட்டனர்.
எனவே அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை காலி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்ட , மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் மற்றும் இதர 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பெர்சத்து கட்சி இவ்வழக்கை தொடுத்து இருந்தது.
சபாவில் பாபர், பத்து சாபி, ரனாவ், சிபிடாங் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக பெர்சத்து கட்சி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டது.








