முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஸாக்கிற்கு வீட்டுக் காவல் அனுமதி வழங்கப்பட்ட முடிவை அனைவரும் மதிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மாமன்னரின் முடிவை மதிப்பதுடன், தவறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
கோத்தா டாமன்சாராவில் இன்று ஃபெஸ்திவல் மேகா ஐலிண்டுங்யு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான அதிகாரம் என்றும், அந்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலைப்பாட்டை தாம் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறிய அவர், நாட்டின் சமூகம் மற்றும் சமூகத்திற்காக பிரதமர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியானவை என்றும் தெரிவித்தார்.








