பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.10-
சிலாங்கூர், உலு கிள்ளானில் உள்ள தேசிய மிருகக்காட்சி சாலைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலையில் வருகை புரிந்தார். சீனாவிலிருந்து புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள ராட்சத பாண்டா ஜோடியைப் பார்வையிட்ட பிரதமர், அவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
மலேசியா மற்றும் சீனா இடையிலான தூதரக உறவின் அடையாளமாக, ஆண் பாண்டாவான Chen Xing மற்றும் பெண் பாண்டாவான Xiao Yue ஆகிய இரு புதிய பாண்டாக்கள், கடந்த நவம்பர் மாதம் மலேசியா வந்தடைந்தன. ஒரு மாத காலக் கட்டாயக் தனிமைப்படுத்தல் மற்றும் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துதல் முறைக்குப் பிறகு, இன்று அவை முதன் முறையாகப் பிரதமர் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
தமது வருகையையொட்டி தேசிய மிருகக்காட்சி சாலையின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பிரதமர் இன்று கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். கடந்த ஆண்டும் இதே போன்றதொரு நிதி வழங்கப்பட்டது.
தேசிய மிருகக்காட்சி சாலை நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் கல்வித் தளம் என்பதைச் சுட்டிக் காட்டிய பிரதமர், இந்த புதிய பாண்டாக்களின் வருகை 2026 மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டிற்கு மேலும் வலுசேர்க்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பாண்டாக்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் இயற்கையுடனான நல்லிணக்கத்தின் சின்னம் என்று குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டத்திற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அந்நாட்டு அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








