நாட்டின் அடுத்த மலாயா தலைமை நீதிபதி வரிசையில் கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகளை ஜேஏசி எனப்படும் நீதிபதிகள் நியமனக்குழு அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் 64 வயது டத்தோ நளினி பத்மநாபனும் ஒருவர் ஆவார்.
சட்டம் மற்றும் நீதித்துறையில் பரந்த அனுபத்தை கொண்டுள்ள நளினி பத்மநாபன், நாட்டின் அடுத்த மலாயா தலைமை நீதிபதி நியமனத்திற்கு அடையாளம் காணப்பட்ட மூன்று பெண் நீதிபதிகள் வரிசையில் ஒருவராக விளங்குகிறார். நலினி பத்மநாதனுக்கு அடுத்து சபாரியா யூசோஃப் மற்றும் ஹஸ்னாஹ் ஹாசிம் ஆகியோர் திகழ்கின்றனர். இந்த மூன்று பெண் நீதிபதிகளுக்கும் இவ்வாண்டுடன் 64 வயதாகும். தற்போது நீதிபரிபாலனத் துறையில் கூட்டரசு நீதிமன்றத்தைச் சேர்ந்த இந்த மூன்று நீதிபதிகளில் நளினி பத்மநாபனே முதிர் நிலை நீதிபதியாவார்.இதர இரண்டு பெண் நீதிபதிகள், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாகவே நளினி பத்மநாபன் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியை வகித்து வருகிறார். அவர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.சபாரியா யூசோஃப்பும்,ஹஸ்னா ஹஷிமும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியில் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் ஆவார். நீதிபதிகளின் கட்டாயப் பணி ஓய்வு 66 வயது ஆகும். தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு ஏற்ப நீதிபதிகள் பதவி காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படலாம்.இந்த மூவரில் ஒருவர் மலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்களேயானால், நாட்டின் நீதித்துறை வரலாற்றில் மலாயா தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் மூன்றாவது பெண்ணாக இவர்களின் ஒருவர் இருப்பர்.மலேசிய வரலாற்றில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையை கொணடுள்ள நளினி பத்மநாபன், 2007 ஆம் ஆண்டு ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட பின்னர் 2009 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நளினி பத்மநாபன், 2018 ஆம் ஆண்டு நீதித்துறையின் உச்ச பரிபாலனமான கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆகக்கடைசியான மேல்முறையீட்டை விசாரணை செய்த 5 நீதிபதிகளில் நளினி பத்மநாபனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.







