அனைத்துலக எரிசக்தி நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டு எரிபொருள் மானியங்களுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட 40 பில்லியன் ரிங்கிட் செலவிடக்கூடும் என்று பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இது, 2026 வரவுசெலவுத் திட்டத்தில் முதலில் ஒதுக்கப்பட்ட 15 பில்லியன் ரிங்கிட்டை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
அனைத்துலக நெருக்கடி நீடித்தாலும், இந்த கூடுதல் செலவினத்தின் மூலம் தகுதியுள்ள மலேசியர்களுக்கு 'புடி95' மற்றும் 'புடி டீசல்' திட்டங்களின் கீழ் மானிய விலையிலான எரிபொருள் தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும் என்றும், மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மானிய விலை எரிபொருள் முறைகேடு மற்றும் கடத்தலுக்கு எதிராக அரசாங்கம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி வரை நாடு முழுவதும் எரிபொருள் கடத்தல் தொடர்பாக மொத்தம் 4,145 வழக்குகள் பதியப்பட்டு 2,311 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் ஆர்மிசான் முகமது அலி தெரிவித்துள்ளார்.








