முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் நீதிமன்ற அபராதத்தைச் செலுத்தப் பொதுமக்களிடம் நிதி திரட்டுவது குறித்து கேள்வி எழுப்பிய மலாயா பல்கலைக்கழக மாணவி உம்மி உமைரா பாக்கிட்டுக்கு Ummi எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல்களுக்கும், இணையவழித் துன்புறுத்தல்களுக்கும், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனது கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அம்மாணவி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகின்றார்.
குறிப்பாக, நஜிப் ரஸாக்கிற்கு நீதிமன்றம் விதித்த 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த உதவுவதற்காகப் பொதுமக்களிடம் நன்கொடை கோரப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மாணவிக்கு எதிரான விமர்சனங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஃபாஹ்மி ஃபாட்சீல், மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்ததற்காக மாணவியை மிரட்டுவதும், வாய்மொழியாகத் துன்புறுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றார்.
அதேவேளையில் பல்கலைக்கழகத்திற்கே சென்று அவரைத் தேடுவதாக மிரட்டல் விடுப்பதும் கண்டிக்கத்தக்கது என்றும், கருத்து வேறுபாடுகள் காரணமாக இது போன்ற செயல்கள் ஒருபோதும் நடக்கக்கூடாது என்றும் ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்தியுள்ளார்.








