அலோர் ஸ்டார், ஜனவரி.19-
தனது காதலியைப் பெர்லிஸில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற 21 வயது இளைஞரும், அவரது 19 வயது காதலியும் கார் விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்.
21 வயது Pang Sheng Qing மற்றும் அவரது 19 வயது காதலி Sheng Qing ஆகியோரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
பினாங்கில் வேலை செய்த தனது காதலியை அழைத்துக் கொண்டு, பெர்லிஸ், Pauh பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு Sheng Qing காரில் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 1.05 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள ஜித்ரா (Jitra) சுங்கச் சாவடி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, கார் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச் சாவடி அருகே இருந்த தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்ற போது கார் 85 சதவீதம் எரிந்து சேதமடைந்திருந்தது. காருக்குள் இருந்த இருவராலும் வெளியே வர முடியாமல் போனதால், அவர்கள் இருவரும் உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
உயிரிழந்த Sheng Qing தனது தந்தையின் வியாபாரத்தில் உதவி செய்து வந்தார். இந்த எதிர்பாராத இழப்பால் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
காதலியைத் தனது வீட்டிற்கு அறிமுகப்படுத்த ஆசையாகச் சென்ற இளைஞனின் பயணம், மரணத்தில் முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








