கோலாலம்பூர், ஜூலை.28-
மலேசியாவின் தலைமை நீதிபதியாக டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இன்று காலையில் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நியமனப் பத்திரத்தை டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட்டிடம் ஒப்படைத்தார்.
இஸ்தானா நெகாராவில் சிறிய சிம்மாசன மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பதவி உறுதிமொழிச் சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப்பிரதமர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப், சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று அப்பீல் நீதிமன்றத் தலைவராக டத்தோ அபு பாக்கார் ஜாயிஸ் மற்றும் சபா, சரவாக் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக டத்தோ அஸிஸா நவாவி ஆகியோரும் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் தங்களுக்கான நியமனப் பத்திரத்தையும் மாமன்னரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.








