கோலாலம்பூர், டிசம்பர்.12-
7 மில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டில் இருந்து டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டை பிராசிகியூஷன் தரப்பு மீட்டுக் கொண்டதற்கு, இவ்வழக்கில் போதுமான சாட்சிகள் இல்லாதது தான் காரணம் என சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கிற்குத் தேவையான முக்கிய சாட்சிகள் இறந்து விட்டதாகவும் அல்லது கண்டறிய முடியாத நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சட்டத்துறை அலுவலகம், மேல்முறையீடு தொடரும் பட்சத்தில் வெற்றிக்கான நியாயமான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய சாட்சிகள் இன்றி பிராசிகியூஷன் தரப்பு இவ்வழக்கை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முடியாது என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், இம்முடிவானது எடுக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து நிலைகளிலும் உள்ள சட்ட சிக்கல்கள் ஆராயப்பட்டதாகவும் சட்டத்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
என்றாலும், இந்த முடிவானது, சரவாக் சூரிய மின்சக்தி திட்ட ஊழல் உட்பட ரோஸ்மா எதிர்கொண்டிருக்கும் மற்ற வழக்குகளையும், அதற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளையும் பாதிக்காது என்றும் சட்டத்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சரவாக்கில் உள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்விளக்குகள் பொருத்தும் 1.25 பில்லியன் மதிப்பிலான குத்தகையில், லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, ரோஸ்மாவுக்கு, கடந்த 2022-ஆம் ஆண்டு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








