கோலாலம்பூர், ஆகஸ்ட்.26-
நகர் மறுமேம்பாடு சட்டத்திருத்தம் மீதான மசோதா, நாளை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காகத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்தச் சட்டத் திருத்த மசோதாவை முழு வீச்சில் எதிர்த்து, அதனை மீட்டுக் கொள்ளும் வரை போராடப் போவதாக எதிர்க்கட்சியினர் இன்று அறிவித்துள்ளனர்.
உத்தேச சட்ட மசோதாவை எதிர்ப்பதால், நாடாளுன்றத்திலிருந்து பங்கேற்பதிலிருந்து தாங்கள் 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்படலாம். அதற்கான சாத்தியத்தை எதிர்கொள்ளத் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடாவான தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
நகர் மறுமேம்பாடு மீதான சட்ட மசோதா குறித்து விவாதம் செய்ய தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நகர மறுமேம்பாட்டுத் திட்டம் என்பது, ஏற்கனவே நகரப் பகுதிகளில் உள்ள , குறிப்பாகப் பழைய கட்டிடங்கள் மற்றும் போதுமான வசதிகள் இல்லாத பகுதிகளை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
இதன் முக்கிய நோக்கங்கள், மக்களுக்கு வீடுகள் வழங்குவது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, மற்றும் திட்டமிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சிக்கு வழிவகுப்பது போன்றவை ஆகும்.
எனினும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுமானால் நகர்புறங்களில் சொந்த நிலங்களில் உள்ள பூமிபுத்ராக்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம் என்றும் இதனால் அவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடலாம் என்றும் எதிர்கட்சியினர் அஞ்சுகின்றனர்.
இந்த மசோதாவை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சியிடம் உள்ள 68 எம்.பி.க்களின் பலம் போதாது என்றாலும் நகர்புறங்களில் உள்ள பூமிபுத்ராக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் செயல்படப் போவதாக தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.








