குடிபோதை அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி மரணத்தை விளைவிக்கும் விபத்துகளில், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதில் நிலவும் முரண்பாடுகள் குறித்து சட்டத்துறை தலைவரை நோக்கி ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் கிள்ளானில் நடந்த விபத்தில் அமிருல் ஹபீஸ் ஓமார் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், ஓட்டுநர் ஆர். சக்திகணபதி மீது 'கொலைக்குற்றம்' சுமத்தப்பட்டதை ராயர் வரவேற்றார். அதே சமயம், கடந்த பிப்ரவரி மாதம் பத்து காஜாவில் நடந்த விபத்தில் மட்டும் ஏன் மென்மையான சட்டம் பயன்படுத்தப்படுகிறது என ராயர் வினவினார்.
பேராக், பத்து காஜா, ஜாலான் தஞ்சோங் துவாலாங்கில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நிகழ்ந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
34 வயது எஸ்.ஆர். சரளா தேவி, அவரின் 3 வயது மகள் எஸ். ஷாஸ்திகா, சரளாதேவியின் தாயார் 65 வயது தாயார் ஜி. சரஸ்வ கோபால் ஆகிய மூவர் விபத்தில் உயிரிழந்தனர்.
இவர்களை மோதித் தள்ளியதாக கூறப்படும் டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் ஓட்டுநர் 27 வயது முகமது கைருல் அஸ்மான் கஞ்சா போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
"கிள்ளான் விபத்தில் ஓட்டுநருக்குக் கொலைக்குற்றம் சுமத்தப்படும்போது, மூன்று இந்தியப் பெண்களின் உயிரைப் பறித்த பத்து காஜா விபத்தில் போதையில் இருந்த ஓட்டுநர் மீது 10 ஆண்டுகள் உட்பட்டே சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் ஏன் வெறும் சட்டப்பிரிவு 41 மட்டுமே பயன்படுத்தி, அலட்சியமாக வாகனத்தை செலுத்தினார் என்று குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது? என்று ராயர் கேள்வி எழுப்பினார்.
ஒரே மாதிரியான குற்றங்களுக்கு வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்துவது சட்டத்தின் ஆட்சிக்கும், அரசியல் சாசனத்தின் சமத்துவக் கொள்கைக்கும் எதிரானது," என ஒரு வழக்கறிஞரான ராயர் சீறினார்.
மக்களிடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் தவிர்க்க, இந்த முரண்பாடு குறித்து சட்டத்துறை தலைவர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என ராயர் தனது அறிக்கையில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.








