ஷா ஆலாம், ஆகஸ்ட்.07-
கடந்த மாதம், தன்வசம், 205 மலேசிய கடப்பிதழ்கள், மூன்று ஆடவர்களுக்குச் சொந்தமான மைகாட் அட்டைகள் மற்றும் ஒரு போலி மைகாட் அட்டை ஆகியவற்றை வைத்திருந்ததாக இந்திய மாது ஒருவர், ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
41 வயது என். பார்வதி என்ற அந்த மாது, மாஜிஸ்திரேட் முகமட் ஷாஃபிக் சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
மற்றவர்களுக்குச் சொந்தமான 205 அனைத்துலக கடப்பிதழ்களை பார்வதி தன் வசம் வைத்திருந்ததாக முதலாவது குற்றச்சாட்டு உட்பட மூன்று குற்றச்சாட்டுகளும் அடுக்கடுக்காக அந்த மாதுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன..
கடந்த ஜுலை 11 ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில், பூச்சோங், தாமான் பூச்சோங் ஹர்தாமாஸ் என்ற இடத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் பார்வதி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் 1966 ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டத்தின் கீழ் பார்வதி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து பார்வதி விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.








