ஜாசின், ஜனவரி.23-
கடந்த ஆண்டு ஆடவர் ஒருவருக்கு மரணம் விளைவித்ததாக மூன்று நபர்கள் மலாக்கா, ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
67 வயது கே. கிருஷ்ணமூர்த்தி, 35 வயது முகமது அஸ்மி முகமது நோர் மற்றும் 26 வயது எம். யோகேஸ்வரன் ஆகிய மூவரும் மாஜிஸ்திரேட் மஸானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி இரவு 7.37 மணியளவில் மலாக்கா, ஜாசின் பெஸ்தாரி பகுதியில் 52 வயது குணாளன் என்பவரின் மரணத்திற்கு தூண்டுகோலாக இருந்ததாக இந்த மூவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் குணாளன் என்பவர் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பொதுமக்களை முகம் சுளிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஒரு வேலையற்ற நபரான குணாளன், சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உயிரிழந்தார்.
அவருக்கு மரணம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மூவருக்கு எதிராக குற்றவியல் சட்டம் 304 பிரிவின் கீழ் நோக்கமில்லா கொலையாக இவ்வழக்கு வகை செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.








