ஷா ஆலாம், டிசம்பர்.15-
மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜனுக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸெலி காஹார் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காண்பதற்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி உதவியை போலீசார் நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கொலை மிரட்டல் தொடர்பில் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் உட்பட சில தரப்பினரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து இருப்பதாக ஷாஸெலி காஹார் தெரிவித்துள்ளார்.
தற்போது குற்றவியல் சட்டம் 233 மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக ஆணைய சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஷாஸெலி காஹார் குறிப்பிட்டார்.








