மலாக்கா, ஆகஸ்ட்.18-
தனது மனைவியையும், வளர்ப்பு மகனையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து, மனைவியின் தலையை வீட்டின் சிலிங்கில் மறைத்து வைத்திருந்த ஒரு சிங்கப்பூர் பிரஜைக்கு மலாக்கா உயர் நீதிமன்றம் இன்று 72 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.
சிறைக்கு அப்பாற்பட்டு, அந்த நபருக்கு 24 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
36 வயது ஷாருல் நிஸான் ஸுரைமி என்ற அந்த சிங்கப்பூர் பிரஜைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பிராசிகியூஷன் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அன்செல்ம் சார்ல்ஸ் ஃபெர்னாண்டிஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
மனைவியையும் வளர்ப்பு மகனையும் சம்பந்தப்பட்ட நபர், மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்று வர்ணித்த நீதிபதி டத்தோ அன்செல்ம், இந்த இரட்டைக் கொலைகளை மறைக்க மனைவியின் தலையைத் தவிர இரு உடல்களின் அவயங்கள் அனைத்தையும் வெவ்வேறு இடங்களில் அந்நபர் வீசியுள்ளார் என்பது விசாரணையில் தெளிவாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து பெரெண்டாம், தாமான் மெர்டெக்கா ஜெயா, ஜாலான் எம்ஜே 10 இல் உள்ள ஒரு வீட்டில் 27 வயதுடைய தனது மனைவி நோர்ஃபாஸெரா பிடின் மற்றும் 11 வயது வளர்ப்பு மகன் முகமட் இமான் அஷ்ராஃப் அப்துல்லா ஆகியோரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக அந்த சிங்கப்பூர் பிரஜை குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.








