குடிநுழைவுத் துறையின் மைஐஎம்எம்எஸ் கணினி அமைப்பானது, கடந்த புதன்கிழமை செயலிழந்தன் உண்மையான காரணம் குறித்து, உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இடையூறு காரணமாக நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகவும், நாட்டின் முக்கியமான குடிநுழைவு அமைப்பானது மீண்டும் தோல்வியடைந்துள்ளது என்றும் லிம் லிப் எங் விமர்சித்துள்ளார்.
அதேவேளையில், மைஐஎம்எம்எஸ் அமைப்பு செயலிழந்ததால், அதிகாரிகள் கையேடு முறையில் சேவைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இச்சம்பவத்திற்காக குடிநுழைவுத் துறை மன்னிப்புக் கேட்பதை விட, இது போன்ற கோளாறுகள் மீண்டும் நடைபெறாத வகையில் உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் லிம் லிப் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று நாடெங்கிலும் மைஐஎம்எம்எஸ் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள் நீடித்ததாக உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.








