ஜெலுத்தோங், டிசம்பர்.16-
பினாங்கு, ஜெலுத்தோங், ஜாலான் லெங்கோங்கில் உள்ள ஓர் உணவகத்தின் முன்புறம் நிகழ்ந்த சண்டை தொடர்பில் போலீசார் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரொஸாக் முகமட் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து 25 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஆயுத சட்டத்தின் கீழ் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கார் பரிவர்த்தனை தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே மூண்ட சண்டையென நம்பப்படுகிறது. பிடிபட்ட 6 சந்தேகப் பேர்வழிகளில் நால்வரை வரும் வியாழக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.
மேலும் இருவருக்கு தடுப்புக் காவல் இன்று முடிவடைவதாக அப்துல் ரோஸாக் மேலும் கூறினார். இந்தத் தகராறு தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
சாலையோரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று, தலைகவசத்தைக் கொண்டு மற்றொரு கும்பலைத் தாக்குவதை அந்தக் காணொளி சித்தரிக்கிறது.








