கோலாலம்பூர், பிப்ரவரி.16-
நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான தமது தீவிர முயற்சியில் இருந்து எந்தவோர் அரசு நிறுவனமோ அல்லது துறையோ தப்ப முடியாது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று எச்சரித்துள்ளார். இதில் ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மும் அடங்கும் என்று மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊடக அலுவலகம் மூலம் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊழலுக்கு எதிரான தமது போரில் இப்போது அதிகமான நபர்கள் தனது கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளதாக மாமன்னர் தெரிவித்துள்ளார்.
ஊழல் என்பது பொதுமக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், அதனை எந்தச் சூழலிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை ஒரு சில துறைகளை அல்லது லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களை மட்டுமே இலக்கு வைக்கிறது என்று எண்ணி விடாதீர்கள். போலீஸ்துறை, குடிநுழைவுத்துறை, சுங்கத் துறை என எந்தத் துறையாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள். ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மும் இதற்கு விதிவிலக்கல்ல,” என்று மாமன்னர் எச்சரித்துள்ளார்.
மேலும், அரசாங்க சீருடைகள், உபகரணங்கள் மற்றும் மருத்துவத் தேவைகளை வழங்கும் இடைத்தரகர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களும் ஊழலில் ஈடுபட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
“எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம்; எனக்கென்று தனிப்பட்ட உளவுத் தகவல்கள் உள்ளன,” என்றும் அவர் கூறினார்.
நேர்மையுடன் செயல்படத் தவறும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், அந்த இடங்கள் தகுதியான மற்றும் நேர்மையான நபர்களுக்கு வழங்கப்படும் என்றும் மாமன்னர் எச்சரித்துள்ளார்.
ஊழல் மற்றும் கடத்தலுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படாத அதிகாரிகள், மற்றவர்களுக்கு வழிவிட்டு விலகிக் கொள்ளலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி, மூன்று வாரங்களுக்குப் பிறகு மாமன்னரின் இந்த அதிரடி அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.








