Sep 28, 2026
Thisaigal NewsYouTube
‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மேலும் நால்வர் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மேலும் நால்வர் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

ஷா ஆலாம், மார்ச்.06-

‘கேப்டன் பிரபா’ (Captain Praba) எனும் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த மேலும் நான்கு நபர்கள், ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

38 வயது சி. நவிந்திரன், 30 வயது எஸ். ஸ்ரீதரன், 30 வயது எஸ். பிரதீப் குமார் மற்றும் 44 வயது கே. தேவேந்திரன் ஆகியோர், நீதிபதி Bhupindar Singh முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி வரை, சிலாங்கூர், கோலா லங்காட், ஜெஞ்சாரோம், கம்போங் சுங்கை ஜாரோம், ஜாலான் மாஹாங் 2-டில் உள்ள எண்ணெய் பனை தோட்டத்தில் இந்த நால்வரும் குற்றச் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 130 பிரிவின் கீழ் நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட இதே கும்பலைச் சேர்ந்த 13 பேருடன் சேர்த்து, இந்த நால்வரையும் விசாரணைக்கு உட்படுத்த அரசு தரப்பு வழக்கறிஞர் Mustaffa P Kunyalam, விண்ணப்பித்துள்ளார்.

‘கேப்டன் பிரபா’ கும்பல் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் கொலை, ஆயுதத் தாக்குதல், தீவைப்பு மற்றும் கும்பல் கொள்ளை போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளது என்று இதற்கு முன்பு போலீஸ் துறை தெரிவித்து இருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் Op Jack Sparrow எனும் பெயரில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நாடு தழுவிய நடத்திய தேடுதல் வேட்டையில் இக்கும்பலைச் சேர்ந்த 17 பேரை இதுவரை கைது செய்துள்ளது.

இருப்பினும், இக்கும்பலின் தலைவன் எனச் சந்தேகிக்கப்படும் ‘கேப்டன் பிரபா’ மற்றும் சிலர், இந்தியா அல்லது தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனினும் இன்றைய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

Related News